Thursday, January 15, 2026
HuisLocalசத்தியலிங்கம் பச்சைத் துரோகி; வைத்தியர் சிவமோகன் பகிரங்க குற்றச்சாட்டு..!

சத்தியலிங்கம் பச்சைத் துரோகி; வைத்தியர் சிவமோகன் பகிரங்க குற்றச்சாட்டு..!

சத்தியலிங்கம் பச்சைத் துரோகி. மாவையால் பதில் செயலாளராக கொண்டு வரப்பட்டவர். ஆனால் அவருக்கும், கட்சிக்கும் துரோகம் செய்து விட்டார் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது குழுவில் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலை நடத்த வேண்டாம் என இரா.சம்மந்தனால் சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகிய இருவருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மத்திய குழுவில் அந்த தகவல் பரிமாறப்பட்டு குறித்த இருவரும் நேரடியாக சம்மந்தன் ஐயாவிடம் சென்று கதைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் சென்று கதைத்தார்கள்.

இருவரும் என்னிடமும் கதைத்தார்கள். நானும் தேர்தல் வேண்டாம். நீங்கள இருவரில் ஒருவர் இரண்டு வருடம் அல்லது ஒரு வருடம் பொறுப்பு எடுங்கள். அடுத்த வருடத்தை மற்றவருக்கு கொடுங்கள் எனக் கூறினேன். அதை வேணும் என்றால் குலுக்கல் அடிப்படையில் தீர்மானித்துக் கொள்ளுங்கள் எனக் கூறினேன்.

போட்டி போட்டால் கட்சி உடைந்து சின்னாபின்னமாக போகும் என எல்லோரும் சொன்னார்கள். எல்லோரும் யாரோ ஒருவருக்கு தான் வாக்கு போட முடியும். அதற்காக நான் இவருக்கு போட்டேன். அவருக்கு போட்டேன் என சொல்லித் திரிய வேண்டிய அவசியமில்லை. அது இரகசிய வாக்கெடுப்பு. அதனால் யார் யாருக்கு போட்டார்கள் என்பது பிரச்சனையில்லை.

சம்மந்தன் ஐயா தம்மை தலைவராக பிரகடனப்படுத்த வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். ஆனால் அவ்வாறு பிரகடனப்படுத்த சம்மந்தன் விரும்பவில்லை. அதற்காக வயது முதிர்ந்த நேரத்தில் கூட அரசாங்க வீட்டில் இருந்தது தவறு எனச் சொல்லி அந்த வீட்டை அரசாங்கத்திடம் கொடுத்து விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என வேலை செய்தார்கள்.

மாவை சேனாதிராஜா ஐயாவால் பதில் செயலாளராக கொண்டு வரப்பட்டவர் தான் சத்தியலிங்கம். பதில் செயலாளர் முடிவெடுத்து கடிதம் எழுதுவதாக இருந்தால் தலைவரது ஆலோசனை பெறப்பட வேண்டும். அதே தலைவருக்கு கடிதம் எழுத முன்பு கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும். ஆனால் சத்தியலிங்கம் அப்படி செய்யவில்லை. பச்சைத் துரோகி.

அவரால் கொண்டு வரப்பட்டவர் அவருக்கு மட்டுமல்ல அந்தக் கட்சிக்கே துரோகம் செய்துள்ளார்.அவரை செயலாளராக கொண்டு வந்ததால் தான் கட்சி கேவலமான நிலைக்கு சென்றது.

மாவை ஐயாவை நிறுத்துவதாக இருந்தால் அதை கலந்துரையாடி செய்திருக்க வேண்டும். அப்படி முடிவெடுப்பதாக இருந்தால் தனக்கு தேசியப் பட்டியல் கிடைப்பதற்கு முன் அவரை நிறுத்தியிருக்க வேண்டும்.

தேசியப் பட்டியல் கைக்கு வந்து முடிய எல்லாவற்றையும் எடுத்து பொக்கற்றுக்குள் போட்டு விட்டு தான் நீங்கள் வைத்தியர்களுக்கும் மிட் வைப்புக்கும் கடிதம் எழுதவது போல் எழுதுகிறீர்கள்.

இது என்ன நடைமுறை? கட்சி நடைமுறைக்கு முரணானது. நீங்கள் வேறு ஒரு நிகழ்ச்சி நிரலில் போய் கொண்டு இருக்கிறீர்கள்.

பதில் பொதுச் செயலாளர் தொடர்ந்தும் இருக்க முடியாது. சம்மந்தனுக்கு துரோகம் செய்தீர்கள். மாவை ஐயாவிற்கு அழுத்தம் கொடுத்து அவரது மரணத்திற்கு காரணமானீர்கள்.

அவருக்கு நீங்கள் மரியாதை செலுத்துவதாக இருந்தால் அவருடைய நினைவு தினத்திற்கு முன் உடனடியாக பதவிகளில் இருந்து வெளியேறி விடுங்கள் எனத் தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed