வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் 2023 முதல் 2025 வரை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஆராயும் போது, கல்வித் தரத்தில் படிப்படியாக வீழ்ச்சியடையும் போக்கு கவனிக்கத்தக்கதாக வெளிப்படுகிறது. இந்த மாற்றமானது வெறும் எண்ணிக்கைகளில் மட்டுமல்லாது, மொத்த கல்வி செயல்திறனின் தரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலில், மூன்று பாடங்களில் சித்தி (3 Pass) பெற்ற மாணவர்களின் வீதத்தைப் பார்க்கும் போது, 2023 ஆம் ஆண்டு 72.83% ஆக இருந்தது. இது 2024 ஆம் ஆண்டில் 71.53% ஆக சற்று குறைந்ததோடு, 2025 ஆம் ஆண்டில் 67.29% ஆக குறிப்பிடத்தக்க அளவில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த தொடர்ச்சியான குறைவு, கல்வி வலயத்தின் மொத்த செயல்திறன் குறைந்து வருவதை தெளிவாக காட்டுகிறது. குறிப்பாக 2024 முதல் 2025 வரை ஏற்பட்ட திடீர் வீழ்ச்சி, கல்வி நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும் எச்சரிக்கை மணி எனக் கருதப்பட வேண்டும்.
அதே நேரத்தில், 3A பெறுபேறுகளைப் பார்க்கும் போது 2025 ஆம் ஆண்டில் சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது. 2023 இல் 9 மாணவர்கள், 2024 இல் 8 மாணவர்கள், 2025 இல் 10 மாணவர்கள் 3A பெற்றுள்ளனர். இதன் மூலம், மிகச் சிறந்த மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், மொத்த மாணவர் சமூகத்தின் கல்வித் தரம் சமமற்ற நிலையில் இருப்பது வெளிப்படுகிறது. அதாவது, உயர்தர மாணவர்களில் சிலர் முன்னேறுகின்றனர்; ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பின்தங்குகின்றனர். அதன் மூலம் சமனான கல்வி வாய்ப்புக்கள் இலவசக் கல்வியினூடாக வழங்கப்படவில்லை என்பதும் புலனாகின்றது.

2025 ஆம் ஆண்டின் பிரிவு ரீதியான பெறுபேறுகள் மேலும் ஆழமான பிரச்சினையை வெளிப்படுத்துகின்றன. கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளில் ஒப்பீட்டளவில் நல்ல சித்தி வீதம் காணப்பட்டாலும், கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளில் குறைந்த பெறுபேறுகள் பதிவாகியுள்ளன. குறித்த துறைகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டாமைக்கு ஆசிரிய வளப் பகிர்வும் பிரதானமான காரணமாக காணப்படுகின்றது. இது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை காட்டுகிறது. எதிர்கால உலகில் முக்கியமான STEM துறைகளில் இவ்வாறு பலவீனமாக காணப்படுவது கவலைக்குரியது. ஆபத்தும் மிக்கது.
மேலும், அனைத்து பாடங்களிலும் சித்தியடையத் தவறிய மாணவர்களின் எண்ணிக்கையும் ஒரு முக்கியமான குறியீடாகும். 2024 ஆம் ஆண்டில் இது அதிகரித்திருந்தாலும், 2025 இல் சிறிய அளவில் குறைந்துள்ளது. இருப்பினும், சாதாரண தரம் சித்தியடைந்து முழுமையான தகுதியுடன் உயர்தரம் வருபவர்களிடம் இத்தகைய வீழ்ச்சிகள் இன்னும் காணப்படுவது, கல்வி வழங்கும் முறையில் அடிப்படை சிக்கல்கள் இருப்பதைக் காட்டுகிறது.

முழுமையாகப் பார்க்கும் போது, வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் உயர்தரப் பெறுபேறுகளில் ஒரு தெளிவான வீழ்ச்சிப் பாதை காணப்படுகிறது. கலைத்துறையில் சில மாணவர்களின் முன்னேற்றம் காணப்பட்டாலும், பெரும்பாலான மாணவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேறவில்லை. குறிப்பாக கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளில் உடனடி கவனம் தேவைப்படுகிறது. இதனால் எதிர்காலத்திலும் கணித, விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கு யாழ்ப்பாணம் உட்பட வெளிமாவட்டங்களை நம்பி இருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
கலைத்துறையில் அதிக மாணவர்கள் சித்தியடைந்த போதும், பல்கலைக் கழகம், கல்வியற் கல்லூரிகளுக்கு செல்பவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்கான எதிர்கால தொழில் வாய்ப்புக்கள் தொடர்பில் ஒரு சந்தேகமான நிலையே காணப்படுகின்றது. கலைத் துறையில் சித்தியடைந்த மாணவர்களிலும் பொது உளச் சார்பு பரீட்சையில் 30 புள்ளிகளைப் பெறாத பல மாணவர்கள் அவர்களுக்கான பல்கலைக் கழக வாய்ப்பு என்பது???
இந்த நிலையை மாற்றுவதற்கு, குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்களுக்கு கூடுதல் கற்றல் பயிற்சி வழங்குதல், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல், ஆசிரியர்களுக்கு பொருத்தமான பாடங்களை வழங்குதல் மற்றும் முறையான மதிப்பீட்டு அமைப்புகளை அறிமுகப்படுத்துதல் போன்ற பல நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
இல்லையெனில், இந்த வீழ்ச்சி தொடருமாயின் எதிர்காலத்தில் மேலும் பாரிய கல்வி சவால்கள் உருவாகும் அபாயம் வவுனியா வடக்கில் ஏற்பட்டும் எனலாம்.


