Tuesday, April 14, 2026
HuisLocalவடக்கில் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் சில பாடசாலைகள்..!

வடக்கில் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் சில பாடசாலைகள்..!

வடக்கு மாகாணத்தில் சில பாடசாலைகளில் தற்போது நடைபெற்று வரும் ஒரு தவறான விடயம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இம்முறை நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறிய அல்லது எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெறாத மாணவர்கள், இரண்டாவது தடவையாக பாடசாலையூடாக விண்ணப்பிக்க முயற்சிக்கும் போது, சில பிரபல பாடசாலை அதிபர்கள் அதற்கு தடையாக நிற்கின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இச்செயலின் பின்னணியில் உள்ள முக்கிய காரணமாக, அந்தந்த பாடசாலைகளின் பெறுபேறு சதவீதத்தை உயர்த்திக் காட்டும் முயற்சியே குறிப்பிடப்படுகிறது. மீண்டும் பரீட்சை எழுதும் மாணவர்கள் தோல்வியடையும் வாய்ப்பு இருப்பதாகக் கருதி அது பாடசாலையின் மொத்தப் பெறுபேற்றை குறைக்கக் கூடும் என்ற அச்சத்தில், மாணவர்களை “தனிப்பட்ட பரீட்சார்த்தி” (private candidate) ஆக விண்ணப்பிக்க அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்த நடவடிக்கை, மாணவர்களின் அடிப்படை கல்வி உரிமையை நேரடியாக மீறும் செயலாகக் கருதப்படுகிறது. ஒரு மாணவர் தனது பாடசாலையின் ஊடாக பரீட்சை எழுதும் உரிமை பெற்றிருக்கிறார். அதனை மறுக்கும் வகையில் எடுக்கப்படும் தீர்மானமானமானது இலவசக் கல்விக்கும், மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் தீங்கானது.

பாடசாலையின் கௌரவம் என்பதற்காக மாணவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்துவது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. மாணவர்களை மீண்டும் முயற்சி செய்ய ஊக்குவிக்கப்பட வேண்டுமே தவிர, தடுக்கப்படக் கூடாது.

வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் என்பதுடன் விசாரணை மேற்கொண்டு, மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டியது அவசியமாகியுள்ளது.

மாணவர்களின் எதிர்காலம் ஒரு எண்ணிக்கை அல்லது சதவீதத்தால் அளவிடப்படக் கூடியது அல்ல. அவர்களின் கனவுகள், முயற்சிகள் மற்றும் கல்வி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பாகும்.

இந்த விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படாது விட்டால், இது மேலும் பல மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும்.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed