யாழ்ப்பாண மாவட்டத்தின் நெடுந்தீவு உள்ளிட்ட கடல் கடந்த தீவகப் பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கஷ்டப் பிரதேச கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்காத வடமாகாண கல்வி அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடு குறித்து, மத்திய கல்வி அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடல் வழிப் பயணங்களை மேற்கொண்டு ஆபத்தான மற்றும் சவாலான சூழலில் பணியாற்றும் பின்வரும் பாடசாலைகளின் ஆசிரியர்கள் தற்போது கொடுப்பனவுகளை இழந்துள்ளனர்
நெடுந்தீவு: 8 பாடசாலைகளைச் சேர்ந்த 92 ஆசிரியர்கள்
நயினாதீவு: 3 பாடசாலைகளைச் சேர்ந்த 46 ஆசிரியர்கள்
அனலைதீவு: 3 பாடசாலைகளைச் சேர்ந்த 23 ஆசிரியர்கள்.
எழுவைதீவு: 2 பாடசாலைகளைச் சேர்ந்த 13 ஆசிரியர்கள்.
கல்வி அமைச்சின் 01/2024 (1) இலக்க பாடசாலை வகைப்பாட்டு சுற்றறிக்கையின் ஊடாக, இப்பாடசாலைகள் “கஷ்டப் பிரதேச” தரத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
இணைய வசதி, நீர் வசதி மற்றும் பேருந்து போக்குவரத்து போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும், இப்பாடசாலைகளுக்குச் செல்வதற்கு அவசியமான “கடல் வழிப் பயணம்” என்ற மிக முக்கியமான காரணி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
வட மாகாண கல்வி அதிகாரிகள் கல்வி அமைச்சுக்கு தரவுகளை வழங்கும்போது, தீவகப் பாடசாலைகளின் புவியியல் சார் இடர்பாடுகளைச் சரியாகச் சுட்டிக் காட்டத் தவறியதே இந்த நிலைக்குக் காரணம் என இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக் காட்டியுள்ளது


