பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் கடந்த 10ஆம் திகதி தமது உரைகளின் போது, பாராளுமன்றத்திற்குப் பொருத்தமற்ற வார்த்தைகளை பிரயோகித்தமையையிட்டு விசாரணை ஒன்றை நடத்துமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அதற்கு மறுநாள் பாராளுமன்ற செயலாளர் நாயகத்தைப் பணித்துள்ளார்.
பாராளுமன்றத்துக்குப் பொருத்தமற்ற வார்த்தை பிரயோகம் பாராளுமன்றத்தில் சகஜமாக இருக்கும் நிலையில் குறிப்பிட்ட ஒரு நாளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரயோகித்த தகாத வார்த்தைகளைப் பற்றி மட்டும் விசாரணை நடத்துவதன் மூலம் சபாநாயகர் என்ன எதிர்பார்க்கிறார் என்பது விளங்கவில்லை.
சிலவேளை, அந்த ஒரு நாளில் இடம்பெற்ற சம்பந்தப்பட்ட சம்பவங்களைப் பற்றி விசாரணை நடத்தி பொதுவாக அவ்வாறான சம்பவங்களை எதிர்காலத்தில் நடைபெறாதிருக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று சபாநாயகர் கருதுகிறார் போலும். ஆயினும், அது நடைமுறை சாத்தியமாகுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.
அதற்கு அடிப்படையான இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாகப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவு மற்றும் பண்பு சார்ந்த தகைமைகள் எதுவும் நாட்டில் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்திலும் இல்லை.
அரசியலமைப்பின் பிரகாரம் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராவதற்குத் தகுதியுள்ள வாக்காளராக இருப்பதும் அரசினால் சம்பளம் பெறும் தொழிலைச் செய்யாதவராக இருப்பதும் மட்டும் போதுமானதாகும். கல்வித் தகைமைகள் மற்றும் நடத்தை சான்றிதழ்கள் எதுவும் அதற்கு அவசியமில்லை.

வாக்காளராவதற்கு ஒருவர் 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கை பிரஜையாக இருக்க வேண்டும். கடந்த ஏழு ஆண்டுகளுக்குள் ஆறு மாதங்களுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவிக்காதவராக இருக்க வேண்டும். மன நலம் குன்றியவராக அறிவிக்கப்படாதவராக இருக்க வேண்டும். அவ்வாறானவர் சட்டத்தின் படி எம்.பியாகவும் இருக்கலாம்.
படித்தவர்கள், படிக்காதவர்கள், நற்குணம் உள்ளவர்கள், நற்குண மற்றவர்கள் போன்ற அனைவரும் சட்டத்தின் முன் சமம் என்ற அடிப்படையிலும் அவ்வாறான சகலருக்கும் ஜனநாயக உரிமைகள் இருக்கின்றன என்ற அடிப்படையிலும் வாக்காளர் ஆவதற்கும் மக்கள் பிரதிநிதியாவதற்கும் எவ்வித தகைமையும் தேவையில்லை என்ற விதி பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கையில் கொலைகாரர்கள், திருடர்கள், அநாகரிக போக்குடையவர்கள் போன்றவர்களும் சட்ட பூர்வமாகவே பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், பல அரசியல் கட்சிகளும் தேர்தல்களுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, நன்னடத்தை உள்ளவர் யார், நாட்டுக்குச் சேவை செய்யக் கூடிய அறிவுத் திறமையும் ஆற்றலும் உள்ளவர் யார் என்பதை பாராது எவரால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை மட்டும் கருத்தில் கொண்டு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.
எனவே அரசியலே தெரியாத நடிகைகள், விளையாட்டு வீரர்கள் போன்றோர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. அரசியல் அறிவு ஏறத்தாழ பூஜ்ஜியமாக இருந்த ஒரு நடிகை 2010 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்துக்குப் போட்டியிட்டு மூத்த அரசியல்வாதியான கரு ஜயசூரியவை பார்க்கிலும் விருப்ப வாக்குகளைப் பெற்றார்.
அதே தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய விருப்ப வாக்குகளால் அம்மாவட்டத்தில் முதலிடத்தில் வந்தார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற கொலை சம்பவமொன்று தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் இருக்கும் நிலையிலேயே பிரேமலால் ஜயசேகர மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அவ்வாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
2020 ஆம் தேர்தலுக்கும் மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜயசேகரவை மீண்டும் வேட்பாளராகத் தெரிவு செய்தது. அப்போதும் அவர் விளக்க மறியலிலேயே இருந்தார். தேர்தலுக்கு முன்னர் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார்.
ஆயினும், அவர் அந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தார் என்ற அடிப்படையில், அவர் தொடர்ந்து போட்டியில் இருக்க அனுமதிக்கப்பட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கத்தைப் படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் இருக்கும் நிலையில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
கடந்த மாதம் 22ஆம் திகதி தமது அலுவலகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக ஆறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையிலும் முந்தைய வழக்கொன்றில் குற்றவாளியாக்கி ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை அனுபவிக்கும் நிலையிலுமே கடந்த மே மாதம் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சக்தி அவருக்கு வாய்ப்பு அளித்தது.
அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் போன்ற நோக்கங்களுக்காகப் பாராளுமன்றத்தை உபயோகிக்க அரசியல் கட்சிகளுக்கு அவசியம் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. விந்தை என்னவென்றால் மக்களுக்கும் அது அவசியம் இல்லை என்று தெரிவதேயாகும்.
அதனாலேயே மேலே குறிப்பிடப்பட்ட பிரேமலால் ஜயசேகர, பிள்ளையான் மற்றும் லசந்த விக்ரமசேகர ஆகியோர் பெருமளவான விருப்ப வாக்குகளுடன் அந்தத் தேர்தல்களில் வெற்றி பெற்றனர். மக்கள் இவ்வாறானவர்களைத் தெரிவு செய்து விட்டு அவர்களின் உரைகளில் ஒழுக்கத்தை எதிர்பார்ப்பதே மடமையாகும்.


