Thursday, April 16, 2026
HuisLocalசவால்களைத் தாண்டிச் சாதிக்கும் துணுக்காய் கல்வி வலயம்..!

சவால்களைத் தாண்டிச் சாதிக்கும் துணுக்காய் கல்வி வலயம்..!

கல்வி என்பது ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், விடிவிற்கும் மிக முக்கியமான திறவுகோலாகும். குறிப்பாக யுத்தப் பாதிப்பு, வறுமை போன்ற கடினமான சூழல்களைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வரும் பிரதேசங்களுக்கு, கல்வி ஒன்றே நம்பிக்கையளிக்கும் ஆயுதம்.

அந்த வகையில், வடமாகாணத்தின் துணுக்காய் கல்வி வலயத்தின் 2023 தொடக்கம் 2025 வரையான க.பொ.த உயர்தரப் பெறுபேறுகளை உற்று நோக்கும் போது, பல தடைகளைத் தாண்டி மாணவர்கள் கல்விச் சிகரத்தை நோக்கிச் சீராக நடையிடுவது தெளிவாகப் புலனாகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளின் தரவுகளின்படி, துணுக்காய் வலயத்தின் ஒட்டு மொத்த உயர்தரச் சித்தி வீதம் தொடர்ச்சியான நேரான வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 60% ஆக இருந்த ஒட்டுமொத்த சித்தி வீதம், 2024 இல் 62.3% ஆகவும், 2025 இல் 63.64% ஆகவும் உயர்வடைந்துள்ளது. வளப்பற்றாக்குறை மிகுந்த ஒரு வலயத்தில், இந்தச் சீரான முன்னேற்றமானது மாணவர்களினதும், கற்பிக்கும் ஆசிரியர்களினதும் அளப்பரிய விடாமுயற்சியைப் பிரதிபலிக்கிறது.

பிரிவு அடிப்படையிலான ஆய்வில், கலைப்பிரிவு மிகவும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2023 இல் 62% இருந்த சித்தி வீதம், 2024 இல் 64% ஆக உயர்ந்து, 2025 இல் 69.27% என மிகுந்த முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இது கலைப்பிரிவில் மாணவர்களின் ஈடுபாடு மற்றும் ஆசிரியர் வழிகாட்டுதல் அதிகரித்திருப்பதை காட்டுகிறது. இதனால், இந்தப் பிரிவு வலயத்தின் மொத்த பெறுபேற்றை உயர்த்தும் முக்கிய சக்தியாக இது உள்ளது.

வர்த்தகப் பிரிவும் நிலையான முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது. 2023 இல் 58% இருந்த சித்தி வீதம், 2024 இல் 61% ஆகவும், 2025 இல் 65.65% ஆகவும் உயர்ந்துள்ளது. குறிப்பாக கணக்கியல் மற்றும் வணிகப் பாடங்களில் மாணவர்கள் மேம்பட்டிருப்பது இந்த வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம். இது எதிர்காலத்தில் மேலும் முன்னேற்றம் காணும் திறன் கொண்ட பிரிவாக கருதப்படுகிறது. தொழில் உலகிற்கும் அவசியமானதாக காணப்படுகின்றது.

மாறாக, கணிதப் பிரிவு சற்று சவாலான நிலையை வெளிப்படுத்துகிறது. 2023 இல் 45% இருந்த சித்தி வீதம் 2024 இல் 48% ஆக உயர்ந்தாலும், 2025 இல் 44.4% ஆக மீண்டும் குறைந்துள்ளது. இது இந்தப் பிரிவில் உள்ள பாடப்பிரச்சினைகள், குறிப்பாக Mathematics மற்றும் Physics ஆகியவற்றின் கடினத்தன்மை காரணமாக இருக்கலாம். இதனால், இந்தப் பிரிவிற்கு விசேட கவனம் மற்றும் ஆதரவு அவசியம் என்பதும் தெளிவாகிறது. எனினும் அருகில் உள்ள ஏனைய வலயங்களுடன் ஒப்பிடும் போது பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை ஓரளவு அதிகமாக உள்ளது.

விஞ்ஞானப் பிரிவில் (Bio Stream) மிதமான ஆனால் நிலையான வளர்ச்சி காணப்படுகிறது. 2023 இல் 50% இருந்த சித்தி வீதம், 2024 இல் 53% ஆக உயர்ந்து, 2025 இல் 53.19% ஆக நிலைத்துள்ளது. இது முன்னேற்றம் காணப்பட்டாலும், வளர்ச்சி வேகம் குறைவாக இருப்பதை காட்டுகிறது. குறிப்பாக Chemistry போன்ற பாடங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், போதுமான ஆசிரிய வளம் இன்மை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

மொத்தத்தில், துணுக்காய் கல்வி வலயத்தின் உயர்தர பெறுபேறுகள் “மெதுவான ஆனால் நிலையான வளர்ச்சி” என்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன. கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகள் வலுவாக முன்னேறி வருகின்றன. அதே சமயம், கணிதம் மற்றும் விஞ்ஞானப் பிரிவுகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டிய நிலைமையில் உள்ளன. எதிர்காலத்திற்கு அவசியமானவையும் கூட.

எதிர்காலத்தில், கணிதம் மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளுக்கு விசேட பயிற்சி திட்டங்கள், ஆய்வக வசதிகள் மேம்பாடு, மற்றும் திறமையான ஆசிரியர்கள் நியமனம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதனுடன், உயர்ந்த Z-score பெறும் மாணவர்களை உருவாக்கும் நோக்கில் கல்வி திட்டமிடலும் அவசியமாகிறது.

துணுக்காய் வலயம் எதிர்கொள்ளும் அடிப்படைச் சவால்களாக,

சமூகத்தின் உளவியலையும், பொருளாதாரத்தையும் சிதைத்த நீண்டகால யுத்தத்தின் வடுக்களிலிருந்தும், வறுமையிலிருந்தும் மீண்டு வந்து மாணவர்கள் இந்த 63.64% சித்தி வீதத்தை அடைகிறார்கள் என்பதே ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.இரண்டாவதாக, கணித மற்றும் விஞ்ஞானப் பெறுபேறுகளின் வீழ்ச்சிக்குப் பிரதான காரணம் “ஆசிரியர் பற்றாக்குறையே” ஆகும்.

இந்தச் சிக்கலான போட்டி நிறைந்த பாடங்களைக் கற்பிக்கப் போதிய நிபுணத்துவமான வளவாளர்கள் இல்லாத நிலையே காணப்படுகிறது. நகரப்புற மாணவர்களைப் போலன்றி, இம்மாணவர்களுக்குத் “தனியார் கல்வி வாய்ப்புக்களும் (Tuition)” மிகக் குறைவாகவே உள்ளன.

பாடசாலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாமலும், மேலதிக வகுப்புக்கள் இல்லாமலும் கணித, விஞ்ஞான மாணவர்கள் தமது சுய முயற்சியிலேயே தங்கியிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இங்கு காணப்படுகிறது.

ஆளணிப் பற்றாக்குறை, தனியார் கல்வி இன்மை, வறுமை மற்றும் போரின் வடுக்கள் என நாலாபுறமும் பல சவால்கள் சூழ்ந்திருந்தாலும், துணுக்காய் கல்வி வலய மாணவர்களின் கல்வித் தாகம் சற்றும் குறையவில்லை என்பதை ஒட்டுமொத்த பெறுபேற்று வளர்ச்சி நிரூபிக்கிறது.

எதிர்காலத்தில், வலயத்தின் கணித மற்றும் விஞ்ஞானப் பாடங்களுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் வெற்றிடங்களை நிரப்புதல், தொழில்நுட்ப கற்கைகள் நோக்கி மாணவர்களை வழிகாட்டுவதும் காலத்தின் கட்டாயமாகும்.

அந்த வகையில் துணுக்காய் கல்வி வலயம் ஒரு வளர்ச்சி பாதையில் மெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. தற்போதய தலைமைத்துவத்தின் திட்டமிடலுடன், பொருத்தமான, தேவையான ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டால் எதிர்காலத்தில் இது வடக்கு மாகாணத்தின் முன்னணி கல்வி வலயங்களில் ஒன்றாக மாறும் திறன் கொண்டதாக மாறும் நிலை காணப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments

error: You are not allowed